உலக நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோய் இந்தியாவிலும் பரவ தொடங்கி இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த நபருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், துபாயிலிருந்து கேரளா வந்த கண்ணூரைச் சேர்ந்த நபருக்கும் குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை, அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார். நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், புனேவில் இருந்து பரிசோதனைக் கருவிகள் கொண்டுவரப்பட்டு மாதிரிகள் சோதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் குரங்கு அம்மை நோய்க்கான பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், துபாயிலிருந்து இந்தியா திரும்பிய கர்நாடக மாநில இளைஞருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை சோதனைச் செய்த மங்களூர் விமான நிலைய ஊழியர்கள் உட்பட தொடர்பில் இருந்த 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.