தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பிரின்ஸ்’ திரைப்பட இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த நிலையில், சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ரோகிணி திரையரங்கில் நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்துள்ளார். இதனால், ரசிகர்கள் முகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். அதேபோல், கார்த்தி நடிப்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்தார்’ திரைப்படமும் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை லைலா, வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேவை, ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். எஸ். லஷ்மண் குமார் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு படங்களின் வருகையால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது டபுள் டமாகா தீபாவளியாகியுள்ளது.