திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.தென்கயிலாயம் எனப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த நவம்பர் 24-ம் தேதி தொடங்கியது. மகா தேரோட்டம் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபத் திருவிழா இன்று நடைபெறவுள்ளது.இதனைமுன்னிட்டு ராஜகோபுரம் உள்ளிட்ட நவ கோபுரங்களும் மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன.
திருவண்ணாமலை உச்சியில் இன்று மாலை ஏற்றப்படும் மகா தீபத்தை11 நாட்களுக்கு தரிசிக்கலாம். இதற்காக, 5 அடி 9 அங்குலம் உயரம் கொண்ட மகா தீபக் கொப்பரை, அண்ணாமலை உச்சிக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. 1,100 மீட்டர் காடா துணி மற்றும் 4,500 கிலோ நெய் பயன்படுத்தப்பட உள்ளது.பரணி தீபம், அர்த்தநாரீஸ்வரர் மற்றும் மகா தீபத்தை தரிசிக்க , இன்றும் நாளையும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 30 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபத் திருவிழா பாதுகாப்பு பணிக்கு, வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 12,000 போலீஸார் ஈடுபட்டுள்ளனர். கோயில் மற்றும் கிரிவலப் பாதையில் சுமார் 500 கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.