பெங்களூரு: பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி அந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் முதல்வர் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:- பிரதமர் மோடியின் கனவை நிறைவேற்றும் வகையில் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், பாதுகாப்பு துறை ஆகியவற்றில் கர்நாடகம் முக்கிய பங்காற்றும். இந்த 14-வது சர்வதேச விமான கண்காட்சி சிறப்பு வாய்ந்தது. சர்வதேச அளவில் இது மிகப்பெரிய விமான கண்காட்சி ஆகும். ஆனால் பெங்களூருவில் விமான கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தினோம். நமது நாட்டின் முதல் செயற்கைகோள் ஆரியபட்டா, பெங்களூருவில் தயாரிக்கப்பட்டது ஆகும்.
மேலும், நாட்டின் மொத்த ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் கர்நாடகத்தின் பங்கு 65 சதவீதம் ஆகும். கர்நாடகத்தில் விமானவியல், பாதுகாப்பு கொள்கை ஆகியவற்றை அமல்படுத்தியுள்ளோம். இந்த விமான கண்காட்சியை நடத்த கர்நாடகத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாதுகாப்பு துறையின் பலத்தை அதிகப்படுத்த கர்நாடகம் தொடர்ந்து பங்காற்றும் என்று கூறியுள்ளார்.