1999ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கார்கில் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றிப்பெற்றது. இதையடுத்து இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் விஜய் திவாஸ் அதாவது கார்கில் போர் வெற்றி தின விழா ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26ஆம் தேதியான இன்று கொண்டாப்படுகிறது. அதன்படி, இன்று டெல்லியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் போரில் உயிர்நீத்த தியாகிகள் மற்றும் இராணுவ வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தினர். முன்னதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கார்கில் போரில் உயிர்தியாகம் செய்த வீரர்களை பெருமைப்படுத்தி பதிவிட்டுள்ளனர். மேலும், கார்கில் விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு சண்டீகரில் உள்ள போர் நினைவு சின்னத்தில் அஞ்சலி செலுத்திய பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், பணியின்போது உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.