வயது மூப்படைந்தவர்கள் பொதுவாகவே இறப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். ஆனால், நான் செத்தால் யார் வந்து பார்க்கப் போகிறார்கள் என்று வருத்தத்துடன் கூறுவதும் உண்டு. இப்படி பேசுபவர்கள் மத்தியில், ஒருசில பெரியவர்கள் தன்னுடைய இறப்புக்கு பின்னராக ஈம காரியங்களுக்கும் பணம் எடுத்து வைப்பதுண்டு. எனினும், கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே பல்லுளி பகுதியை சேர்ந்த ரோஸி உயிரிடன் இருக்கும்போதே தனக்கு தானே 6 வருடங்களுக்கு முன் கல்லறை ஒன்றை கட்டியுள்ளார். கூலி வேலை பார்த்து வந்த ரோஸிக்கு வயது 70. திருமணமாகாத ரோஸியும் உடன் பிறந்தவர்களும் தொடர்பில் இல்லாத நிலையில், அக்கம் பக்கத்தினர் ரோஸியைப் பார்த்து நீ இறந்தால் உன்னை அடக்கம் செய்ய கூட யாரும் இல்லை என்று பேசுவதை தீவிரமாக எடுத்துக்கொண்டு தனக்கு சொந்தமான இடத்தில் கல்லறைக்கட்டி அதற்கு அருகில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் ரோஸி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே காவல்துறையினருக்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் அளிக்க, அங்கு வந்து காவல்துறையினர் பார்த்தபோது ரோஸி உயிரிழந்துள்ளது தெரியவந்தது. ஊரார் பேச்சுக்காக தனக்குத் தானே கல்லறைக் கட்டிக்கொண்ட ரோஸின் மறைவு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.