காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான குலாம் நபி ஆதாக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நேற்றுதான் குணமடைந்து வீடு திரும்பினார். இதற்கிடையில், எம்பி கனிமொழிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்று பாதித்த நிலையில், தற்போது 2ஆவது முறையாக மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் கனிமொழி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கனிமொழி ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, இந்திய கிரிக்கெட் அணியின் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜூலை 1ஆம் தேதி நடிப்பெறவுள்ள இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக விமான நிலையம் சென்ற அஸ்வினுக்கு, கொரோனா நோய் தொற்று தடுப்பு நடைவடிக்கைப்படி, பரிசோதனை செய்ததில் அஸ்வினுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஸ்வின் இங்கிலாந்துக்கு செல்லாமல் இந்தியாவிலேயே தன்னை தற்போது தனிமைபடுத்தப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.