காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் மூர்த்திக்கு மாலதி என்ற மனைவியும், கனிஷ்கா என்ற 4 வயது மகளும் உள்ளனர். சிறுமி கனிஷ்காவுக்கு அபாரமான ஞாபக திறன் இருப்பதை கண்டறிந்த பெற்றோர், ஏதேனும் சாதனைப்படைக்க செய்ய வேண்டும் என்று முடிவு செய்து குறிஞ்சிப்பாடில் உள்ள 99 பூக்களின் பெயர்களையும், 110 அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களையும் வாசிக்க வைத்து பயிற்சி அளித்தனர். சிறுமி கனிஷ்கா நன்கு பயிற்சி பெற்று, தற்பொழுது 99 பூக்களின் பெயர்களையும் 52 நொடிகளிலும், 110 கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களையும் 3 நிமிடம் 3 நொடிகள் என்ற குறைந்த கால நேரத்தில் சொல்லி இருக்கிறார். சிறுமியின் இந்த சாதனை கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இதனையறிந்த, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, சிறுமி கனிஷ்காவை நேரில் வரவழைத்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில் பாராட்டி வாழ்த்தினார். குறைந்த வயதில் அறிவுத்திறனோடு சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த சிறுமியையும், சாதனை புரிய ஊக்குவித்த பெற்றோர்களையும் அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டினார்கள்.