காஞ்சிபுரம் மாவட்டம், நரப்பாக்கம் ஊராட்சியில் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளும் வகையில் தனியார் ஐடி நிறுவன ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் பணியில் ஈடுபட்டிருந்த கிராம பெண்களுடன் பணியில் ஈடுபட்டனர். பின்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு விவசாய முறைகளை கேட்டறிந்தனர். மேலும் கிராம கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கிராமப்புற மேம்பாட்டு திட்டம் குறித்தும் கலந்துரையாடினர். இந்த நிகழ்ச்சி விவசாயிகளுக்கும் கார்ப்பரேட் கம்பெனி ஊழியர்களுக்கும் ஒரு பாலமாக அமையும் என கார்ப்பரேட் கம்பெனி ஊழியர்கள் தெரிவித்தனர். இவற்றால் கிராமப்புற விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் அனைத்தும் நகர்புறங்களில் எந்த அளவிற்கு அத்தியாவசியப் பொருளாக விளங்குகின்றன என்பதை விவசாயிகள் சுட்டிக்காட்டினர். தனியார் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாரத் தலைமை ஏற்றிருந்தார். சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார் முன்னிலையில், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் தேவபாலன், ஊராட்சி மன்ற துணை தலைவர் அருண்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சதீஷ், மகேஸ்வரி சூர்யா, மாரி சிவமூர்த்தி, தொழில்நுட்பப்பிரிவு அமைப்பாளர் அமர்நாத் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.