கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டம் வகுப்பு படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி, கடந்த மாதம் 13ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து, மாணவியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சின்னசேலம் காவல்துறையினர் தனியார் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தனியார் பள்ளியை சார்ந்த 5 பேரும் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், இவர்கள் 5 பேரும் ஜாமின் மனு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை கேட்ட நீதிபதி இதுத்தொடர்பான காவல்துறை நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியபோது, விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு நீதிபதி, மனுதாரர்கள் என்ன குற்றம் அவர்கள் செய்தனர்? ஆசிரியர், தாளாளராக இருப்பதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளனரா? போன்ற விவரங்களை கேட்டு வந்திருக்க வேண்டும் என காவல்துறை தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார். மனுதாரர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் கூறி வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்துள்ளார்.