புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் இயல், இசை, நாடகம், நடனம், ஓவியம்- சிற்பம் மற்றும் நாட்டுப்புறக்கலை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகளும், தமிழுக்கு சிறந்த தொண்டு புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்மாமணி விருதுகளும் புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக வழங்கப்படாத நிலையில், தற்போது 2013 முதல் 2021ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுகள் தர முடிவு எடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது 743 விண்ணங்களில் 216 பேருக்கு நாளை கலைமாமணி விருது தரப்படவுள்ளது. இந்நிகழ்வு நாளை கம்பன் கலையரங்கில் நடக்கிறது.
அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக கடிதத்தை கலைப்பண்பாட்டுத்துறை இயக்குநர் கலியபெருமாள் அனுப்பியுள்ளார். வழக்கமாக விருதாளர்கள் பட்டியல் வெளியிடும் புதுச்சேரி அரசு, இம்முறை மொத்த விருது பட்டியல் இதுவரை அரசு தரப்பில் வெளியிடப்படவில்லை. ஒவ்வொருவருக்கும் ரூ. 50 ஆயிரம் ரொக்கமும், சான்றிதழும் தரப்பட உள்ளதாக அரசு தரப்பில் குறிப்பிட்டனர்.