புதுடெல்லி : உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத், ‘புதையும் நகரமாக’ மாறியிருக்கிறது. இதுவரை 169 குடும்பங்களைச் சேர்ந்த 589 பேர் இங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ வெளியிட்டுள்ள செயற்கைகோள் புகைப்படங்களில், ஜோஷிமத் நகரம் வெறும் 12 நாட்களில் 5.4 செ.மீ. அளவுக்கு புதைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த புகைப்படங்களை கார்டோசாட்-2எஸ் செயற்கைக்கோள் எடுத்துள்ளது. இதுகுறித்து ‘இஸ்ரோ’வின் தேசிய தொலை உணர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு ஏப்ரல்-நவம்பர் இடையிலான காலகட்டத்தில் ஜோஷிமத் 8.9 செ.மீ. அளவுக்கு புதைந்திருக்கிறது. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் 27-ந்தேதி முதல் இம்மாதம் 8-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் நிலம் தாழ்வடைவது தீவிரமடைந்து 12 நாட்களிலேயே 5.4 செ.மீ. அளவுக்கு ஜோஷிமத் புதைந்துள்ளது.
மேலும், இதன் உச்சிப்பகுதி ஜோஷிமத்-ஆலி சாலை அருகே 2 ஆயிரத்து 180 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. தாழ்வடைந்த பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் தளமும், நரசிங்கபெருமாள் கோவிலும் முக்கிய இடங்களாக உள்ளன. இதற்கிடையில் ஜோஷிமத் நகரின் நிலை, அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார் .