தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் பேசியதாவது :- சாதிச் சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்ற நிலுவையிலுள்ள சான்றிதழ்களை ஒருமாத காலத்திற்குள், தாமதமின்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தஞ்சாவூர், கோயம்புத்தூர், மதுரை மாவட்டங்களில் பட்டா மாறுதலில் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி சேவை வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும்,வேலூர், தருமபுரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். மழைநீர் வடிகால், பாதாள சாக்கடைத் திட்டங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகள், நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார். பேருந்து சேவைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு குறையாமல் இயக்கப்பட வேண்டும், குறைவாக பேருந்துகள் இயக்கப்பட்டால் காரணங்களை கண்டறிந்து உடனடியாக களைய வேண்டும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.