“ஆவின் டிலைட்” பசும்பால் நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் வரை பேக் செய்யும் திறன் கொண்ட சென்னை சோழிங்கநல்லூர் பால்பண்ணையில் பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய வடிவத்தில் 500 மில்லி பாக்கெட்டுகளில் தயார் செய்து அதிகபட்ச சில்லறை விலை ரூ.30க்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆவின் டிலைட் பசும்பால் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆவின் டிலைட் 3.5% கொழுப்பு மற்றும் 8.5% இதர சத்துக்கள் (SNF) கொண்ட இப்பாலினை 90 நாட்கள் வரை எவ்வித குளிர்சாதன வசதியின்றி வைத்து பயன்படுத்தலாம் என்றும், எவ்வித வேதி பொருட்களும் சேர்க்கப்படாமல் நவீன தொழில்நுட்ப முறையில் பேக் செய்யப்படுவதால் தொலைதூர பயணங்களுக்கு எடுத்துச் செல்ல உகந்ததாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழைக்காலங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பால் கிடைத்திட ஆவின் டிலைட் மிகப்பெரிய பங்காற்றும் எனக் கருதப்படுகிறது.