2014ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையில் ஜூன் 12ம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடல் மற்றும் மனம் இரண்டுமே ஒருங்கிணைந்து, செயல்பட, உடல் ஆரோக்கியமாக இருக்க, நோய்களைத் தடுக்க, மூப்பைத் தடுக்க, என்று பல விதங்களில் யோகாசனம் உதவுவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆசனம், பிராணாயமம், தியானம் இவற்றைத் தொடர்ச்சியாக செய்வதால் உடல் உறுப்புகள் தூய்மையாகி சீராக இயங்குகின்றன. இதனையொட்டி, இந்தியாவின் பாரம்பரியமான யோகாசனம், வெளிநாட்டவர்களிடையேயும் பிரபலமாகியது. இந்த நிலையில் இன்று 8-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தையொட்டி கர்நாடக மாநிலம் மைசூருவில் அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பொதுமக்கள் 15 ஆயிரம் பேருடன் இணைந்து பல்வேறு யோகா பயிற்சிகளை இன்று மேற்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், யோகா மனிதரிடத்திலும், சமூகத்திலும் அமைதியை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார். தனிநபர் மட்டுமின்றி நாட்டிற்கும், உலகத்திற்கும் யோகா அமைதியை தருவதாகக் கூறிய மோடி, மனதையும், உடலையும் சீராக வைத்திருக்க யோகா உதவும் என்றார். நாடு முழுவதும் நடைபெற்ற யோகா தினக் கொண்டாட்டங்களில், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்தனர்.