சென்னை: உலக அலைச்சறுக்கு லீக்கின் ஒரு கட்டமாக சர்வதேச அலைச்சறுக்கு ஓபன் மாமல்லபுரத்தில் வரும் ஆகஸ்ட் 14 முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு அலைச்சறுக்கு சங்கம், இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பு ஆகியவை இணைந்து இந்த போட்டியை நடத்துகின்றன. சர்வதேச அலைச்சறுக்கு போட்டி இந்தியாவில் நடத்தப்பட உள்ளது இதுவே முதன்முறையாகும்.
இதில் கலந்து கொண்ட தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது:- “இது விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் மாநில அரசாங்கத்தின் மற்றொரு முயற்சியாகும். மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியானது இந்திய அலைச்சறுக்கு வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், நாட்டுக்கு பெருமை சேர்க்கவும் சிறந்த தளமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
உலக அலைச்சறுக்கு லீக்கின் தகுதி சுற்றுக்கான 3 ஆயிரம் புள்ளிகளை கொண்ட சர்வதேச அலைச்சறுக்கு ஓபன்-தமிழ்நாடு போட்டியில் 12 முதல் 14 நாடுகளைச் சேர்ந்த 80 முதல் 100 வீரர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இந்தியா மற்றும் தமிழ்நாடு அலைச்சறுக்கு சங்கத்தின் தலைவர் அருண் வாசு தெரிவித்தார். நிகழ்ச்சியின் போது போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.2.67 கோடிக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அருண் வாசுவிடம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.