இந்தியா வந்துள்ள, பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. அதன்படி முதலாவது 20 ஓவர் போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. டி காக்-கேப்டன் பவுமா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கேப்டன் பவுமா ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப், தென்னாப்பிரிக்க அணியின் டி காக் (1 ரன்,) ரிலீ ரோஸோ, மில்லர் ஆகியோரை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்கச் செய்து தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முன்கள வீரர்கள் ஏமாற்றம் அளித்து வந்த நிலையில், நடுவரிசை வீரர்கள் பார்னெல்- கேசவ் மகாராஜ் ஜோடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இருந்தாலும், இந்திய அணியின் நேர்த்தியான பந்துவீச்சை தாக்குப்பிடிக்காமல் பார்னெல் 24 ரன்களிலும் கேசவ் மகாராஜ் 41 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட் இழந்து 106 ரன்கள் எடுத்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல்- கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா பந்துவீச்சில் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து வந்த விராட் கோலி 3 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் ராகுலுடன் சூர்யகுமார் இணைந்து தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சாளர்களின் நேர்த்தியான பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு அரைசதம் அடித்தார். இறுதியில் சிக்சர் அடித்து ராகுல் தனது அரைசதத்துடன் இந்திய அணியை வெற்றிப்பெறச் செய்தார். இந்திய அணி 16.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.