இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி அந்த நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நேற்றுமுன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து இந்தோனேசியாவின் கிரிகோரியா துன்ஜூங்கை 23-21, 20-22, 21-11 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப் பெற்றார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் பி.வி.சிந்து உலகின் 8ஆம் நிலை வீரரான தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனானை எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ரட்சனோக் 21-12, 21-10 என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்துவை வீழ்த்தி அரையிறுதிப்போட்டிக்கு தேர்வானார். அதேபோல, ஆடவர் ஒற்றையர் பிரிவின் 2ஆவது சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த லக்ஷயா சென், டென்மார்க் வீரர் ராஸ்மஸ் ஜெம்கேவை 21-18, 21-15 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தார். இதன்மூலம் 2-0 என்ற நேர் செட் கணக்கில் காலிறுதிக்கு முன்னேறிய லக்ஷயா சென் இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் சீன தைபேவை சேர்ந்த சேவ் டின் சென்னிடம் 16-21, 21-12, 14-21 என்ற புள்ளி கணக்கில் தோல்வியுற்றார். ஆட்டத்தின் முதல் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சேவ் டின் சென், 2ஆவது சுற்றில் லக்ஷயா சென்னின் நிலையான ஆட்டத்தால் அந்த சுற்றை அவரிடம் பறிகொடுத்தார். எனினும், 3ஆவது சுற்றில் சேவ் டின் சென் துடிப்புடன் ஆடி ஆட்டத்தை கைப்பற்றினார்.