போட்செஃப்ஸ்ட்ரூம்: தென் ஆப்பிரிக்காவில் போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 17.1 ஓவரில் 68 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ரியானா மெக்டொனால்ட் 19, அலெக்சா ஸ்டோன்ஹவுஸ் 11, சோபியா ஸ்மால் 11, நியாம் ஹாலண்ட் 10 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீராங்கனைகள் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை.
இந்திய அணி சார்பில் டைட்டாஸ் சாது, அர்ச்சான தேவி, பர்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 69 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 69 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய அணி மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஐசிசி தொடரை வெல்வது இதுவே முதன்முறையாகும். ரூ.5 கோடி பரிசு ஐசிசி யு-19 மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.