மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதன்படி, இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டின் போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கேப்டன் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டகாரர்களான தவான் மற்றும் கில் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தவான் 99 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து சதம் அடிப்பார் என்ற ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் ஆட்டத்தை இழந்தார். இதையடுத்து இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 308 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஹோப் 7 ரன்களில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க வீரரான கய்ல் மயர்ஸ், ப்ரூக்ஸ் மற்றும் கிங் ஆகிய வீரர்கள் துணை கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழுந்தாலும், மற்றொரு பக்கம் ரன்களும் வேகமாக உயர்ந்துக்கொண்டு இருந்தது. இந்த நிலையில், கடைசி ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டபோது, சிராஜ் பந்துவீச்சில் விளையாடிய ரொமரியோ சப்பர்ட் சிறப்பாக ஆடினார். வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டபோது, கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இதன் மூலம் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. கேப்டன் தவான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.