கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட புகார்களில் சிக்கிய இங்கிலாந்து நாட்டின் போரிஸ் ஜான்ஸன் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, புதிய பிரதமர் பொறுப்பேற்கும் வரை போரிஸ் ஜான்ஸன் பிரதமராக தொடர்ந்து வருகிறார். இந்தநிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் புதிய பிரதமரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைப்பெற்றுவருகிறது. இங்கிலாந்து அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சித் தலைவர்தான் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்க முடியும். எனவே, கட்சியின் தலைவரைத் தேர்வு செய்யும் வாக்கெடுப்பு நேற்று தொடங்கியது. இதில், 8 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கும் பங்கேற்றுள்ளார். முதல் சுற்று வாக்குப்பதிவில் இதில் 88 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்த ரிஷி சுனக், 2ஆம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதனையடுத்து, போட்டியாளர்கள் எண்ணிக்கை 6 ஆக குறைந்த நிலையில், இன்று 2ஆம் சுற்று தேர்தல் நடைபெறுகிறது.