இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, நேற்று இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் சவுதம்டன் மைதானத்தில் விளையாடியது. கொரோனாவில் இருந்து மீண்ட ரோஹித் ஷர்மா மீண்டும் கேப்டனாக, அவர் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோஹித் ஷர்மா-இஷான் கிஷன் இணையில், ரோஹித் 24 ரன்களும், கிஷன் 8 ரன்களும் எடுத்தனர். இவர்களை தொடர்ந்து தீபக், ஹூடா, சூர்யகுமாரை அடுத்து விளையாடிய ஹர்திக் பாண்ட்யா அரை சதம் விளாசினார். இதனையடுத்து 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றிப்பெற்றது. இந்த தொடரின் முதல் வெற்றியை இந்திய அணி பதிவு செய்ய உதவியாக இருந்த ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகள் மோதும் அடுத்த போட்டி நாளை நடைபெற உள்ளது.