பிரம்மாண்ட திரைப்பட இயக்குநர் ஷங்கர் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன்2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில், திரைப்படம் தொடங்கி சில ஆண்டுகள் ஆனதால், தற்போது ரசிகர்கள் இந்தியன் 2 பட அப்டேட்டை கேட்டு வருகின்றனர். முன்னதாக, பூந்தமல்லி படபிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டு 3 பேர் இறந்து போனதாலும், லைகா நிறுவனத்துடன் இயக்குநர் ஷங்கருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும் 2 ஆண்டுக்கு மேல் கிடப்பில் போடப்பட்ட இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கவுள்ளது. இதற்காக, சென்னை வடபழனி பிரசாத் லேபில் படத்திற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றதும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.