இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது. அதில், இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இங்கிலாந்தில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் சேகரித்தது. இதைத்தொடர்ந்து, 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே, 17 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வியடைந்தது. எனினும், தொடரில் முதல் மற்றும் இரண்டாவது டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று இருப்பதால் இந்த தொடரைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.