ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்தது. அதன்படி, நேற்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹராரே நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஜிம்பாப்வே அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. இதில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது. முன்னதாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்து விளையாடியது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்து 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது இந்திய அணி. இதில் கேப்டன் ராகுல் 30 ரன்களும், சுப்மான் கில் 130 ரன்களும், இஷான் கிஷன் அரை சதமும், தவன் 40 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே வீரர் பிராட் எவன்ஸ் 5 இந்திய வீரர்களை தனது பந்துவீச்சில் பெவிலியனுக்கு அனுப்பினார். இதையடுத்து, 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி போராடி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 276 ரன்கள் எடுத்தது. எனினும், 13 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை இழந்தது. ஏற்கனவே தொடரின் முதல் 2 போட்டிகளில் வெற்றிப்பெற்று இருந்ததால் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுவதும் கைப்பற்றியது.