வங்கதேசத்திற்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் சென்றுள்ளது. ஒருநாள் தொடரை 2 போட்டிகளில் வென்று ஏற்கெனவே வங்கதேசம் கைப்பற்றிவிட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 பந்துகளில் வெறும் 3 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் மற்றொரு தொடக்க வீரரான களமிறங்கிய இஷான் கிஷன் ஆரம்பத்திலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் , அவருடன் விராட் கோலி இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தனது அதிரடியான ஆட்டத்தினால் 126 பந்துகளில் 210 ரன்கள் குவித்து இரட்டை சதம் அடித்து சாதனை படித்துள்ளார். மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிவேக இரட்டைச் சதம் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் இஷான் கிஷன். 2015 ஐஐசி உலகக் கோப்பை போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 138 பந்துகளில் கிறிஸ் கெயில் அடித்த அதிவேக இரட்டை சதமே இதுவரை சாதனையாக இருந்தது.
விராட் கோலியும் தன் பங்கிற்கு பந்துகளை பவுண்ட்ரிகளுக்கும், சிக்ஸருமாக சர்வதேச அளவில் இது அவருடைய 72 ஆவது சதத்தினை பதிவு செய்தார். இந்தச் சதத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை முந்தி இரண்டாம் இடத்திற்கு விராட் கோலி முன்னேறி உள்ளார். முதலிடத்தில் நூறு சதங்களுடன் சச்சின் தொடர்கிறார்.
மேலும், வங்கதேசத்துக்கு 410 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது இந்திய அணி. 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து இந்திய அணி 409 ரன்கள் குவித்துள்ளது. ஒருநாள் போட்டியில் 400 ரன்களை கடந்து இந்தியா ஸ்கோர் செய்துள்ளது இது 6வது முறை என்று கூறப்படுகிறது.