பெண்ணை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு மணமுடிக்கும் மோகம் எல்லா பெற்றோரிடமும் இன்றும் இருந்து வருகிறது. ஆனால் சரியாக விசாரித்து திருமணம் செய்யப்படாததால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அப்படி பாதிக்கப்பட்ட பெண்ணான, திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையைச் சேர்ந்த தஸ்லீமா. இவருக்கும் நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த முகமது ரபீக் என்பவருக்கும் சுமார் ரூ.2.50 கோடி செலவில் 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. சிங்கப்பூரில் காவல் அதிகாரியாக பணியாற்றும் ரபீக் திருமணமாகி அங்கு மனைவியை அழைத்துச் சென்ற ஒரே மாதத்தில் மனநலம் சரியில்லை, நடத்தை சரியில்லை என்று காரணங்களைச் சொல்லி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியதுடன், விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஆனால் வரதட்சணையாகப் பெற்ற எதையும் கொடுக்கவில்லை. இதனையடுத்து, பெண்ணின் பெற்றோர் சிங்கப்பூர் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்த அமர்நிஸா என்ற மற்றொரு பெண்ணை சுமார் ரூ.1 கோடி செலவில் திருமணம் செய்து புதுமாப்பிளையாகியுள்ளார் ரபீக். முதல் மனைவியை பிறந்த வீட்டுக்கு அனுப்பியது போலவே, அமர்நிஸாவையும் திருப்பி அனுப்பியுள்ளார். இதனையடுத்து, மீண்டும் அடுத்த திருமணத்துக்கு ரபீக் தயாராகி வருவதாக தகவல் வெளியானதையடுத்து ரபீக்கின் முன்னாள் மனைவிகளின் குடும்பத்தினர் கூட்டாக திருவாரூர் அனைத்து மகளிர் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் மனு கொடுத்துள்ளனர். தங்கள் மகள்களுக்கு நடந்ததுபோல வேறு எந்த பெண்ணுக்கும் அநீதி நடந்துவிடக்கூடாது என்று புலம்பும் ரபீக் மனைவிகளின் பெற்றோர், பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதற்கு முன் விசாரித்து செயல்பட்டு இருந்தால் இப்படி கஷ்ப்பட்டு இருக்கவேண்டியது இருக்காது என்று அந்த பகுதியைச் சேர்ந்த பலரும் தெரிவித்து வருகின்றனர்.