கொழும்பு: இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அலி சப்ரி: நாங்கள் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில், இந்திய அரசின் உதவிதான் நெருக்கடியில் இருந்து நாங்கள் ஓரளவு மீண்டு வர முக்கிய காரணம் . அத்தியாவசியப் பொருட்கள், மனிதாபிமான உதவிகள் என 4 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியா இலங்கைக்கு உதவியது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்திய அரசுக்கு, இந்திய மக்களுக்கு இலங்கை அதிபர் சார்பிலும் இலங்கை மக்கள் சார்பிலும் ஆழமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதையடுத்துப் பேசிய ஜெய்சங்கர்: இலங்கைக்கு உதவும் மற்ற நாடுகளின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்வதற்காக காத்திருக்காமல் இந்தியா உதவியது. இலங்கைக்கு கடன் அளிக்கும் விவகாரத்தில், சர்வதேச அமைப்புகள் தயக்கமின்றி கடனுதவி அளித்து இலங்கையின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது” என தெரிவித்தார்.