வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் எழில்மிக்க மாநிலம் என்று சொன்னால் அது மணிப்பூராகத்தான் இருக்க முடியும். ஆனால், இந்த மாநிலம் தற்போது ரத்த கரையால் சிவந்திருக்கிறது. இது என்னுடைய சொந்த பூமி. ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றிய என்னால் இங்கு வாழ முடியவில்லை என கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கூக்குரல் எழுப்பி இருந்தார் ராணுவ அதிகாரி ஒருவர். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை.
இம்மாநிலத்தில் இரண்டு வகையான இன குழுக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். ஒன்று மைத்தேயி/மெய்டெய் எனப்படும் பழங்குடி அல்லாத சமூகத்தினர். இரண்டாவது, மாநிலத்தின் பூர்வகுடிகளான குக்கி+நாகா எனும் பழங்குடியினர். இதில் மைத்தேயி/மெய்டெய் சமூகத்தினரின் எண்ணிக்கை 53 சதவிகிதம். எனவே வாக்குகள் அதிகம். இதனை கவனித்த பாஜக சமீபத்திய தேர்தல் வாக்குறுதியில் மைத்தேயி/மெய்டெய் சமூக மக்களுக்கு பழங்குடி சமூகத்தினருக்கான அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறியிருந்தது.
முதன்முதலாக மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மைதேயி சமூக மக்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் கடந்த மே மாதம் 3ஆம் தேதி அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. மோதல் பல மாவட்டங்களுக்கு பரவி வன்முறை வெடித்தது. இதனால், தற்போது வரை மணிப்பூர் கலவர பூமியாக காட்சியளிக்கிறது.
வன்முறையால் பல ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் இதில் தீக்கிரையாக்கப்பட்டன. 135 பேர் உயிரிழந்து இருப்பதாக அரசு தெரிவித்தால் பலி எண்ணிக்கை இதை விட பன்மடங்கு அதிகம் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரில் சுமார் 3 மாதங்களாக வன்முறை சம்பவங்கள் தொடர்கின்றன. ஆனால் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மத்திய அரசு அதனை கட்டுப்படுத்தவில்லை.
மணிப்பூரில் இணையதள இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருப்பதால் இரண்டரை மாதம் கழித்து இச்சம்பவம் தாமதமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.
பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் உலகையே உலுக்கி உள்ளது, பாதிக்கப்பட்ட பெண்களின் வீட்டை எரித்து 2 பெண்களையும் நிர்வாணமாக்கி இழுத்து சென்ற கும்பல், 20 வயது இளம் பெண்ணை கும்பலாக பலாத்காரம் செய்ததுடன், இதனை தடுக்க முயன்ற சகோதரரையும் அடித்து கொன்று இருக்கிறது. ட்விட்டர் டிரெண்டிங்கில் இந்திய அளவில் இந்த சம்பவம் முதலிடத்தில் உள்ளது.
முன்னதாக, மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துச் செல்லும் வீடியோக்களை மறுபகிர்வு செய்வதைத் தடை செய்ய வேண்டும் என ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களுக்கு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வீடியோக்களை யாரும் பகிர வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் மாநிலத் தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் மே 4 அன்று நடந்தது என்று பழங்குடியின பழங்குடித் தலைவர்கள் மன்றம் (ITLF) தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், காங்போக்பியில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இந்த சம்பவம் வேறொரு மாவட்டத்தில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மணிப்பூரில் ஆண்கள் ஒரு குழுவால் சாலையில் இரண்டு பெண்களை நிர்வாணமாக அணிவகுத்துச் செல்லும் கொடூரமான வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, பெரும் கண்டனங்களையும் நடவடிக்கைக்கான அழைப்புகளையும் பெற்றுள்ளது. வயலில் இரண்டு பெண்களும் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக பழங்குடியினர் அமைப்பு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.
மணிப்பூர் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.மணிப்பூர் விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “என் இதயம் வலியாலும் கோபத்தாலும் நிறைந்திருக்கிறது. மணிப்பூரில் நடந்த சம்பவம் எந்த நாகரீக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடானது. மணிப்பூரின் மகள்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் தப்ப முடியாது. அனைத்து முதல்வர்களும் தங்கள் மாநிலங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கை மேலும் வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்காக மற்றும் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க, ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மணிப்பூரில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து நிர்வாணமாக்கி அழைத்து சென்ற விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், “இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க சிறிது கால அவகாசம் கொடுப்போம்; இல்லையெனில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் எச்சரிக்கை விடுத்துள்ளார். மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நடைபெற்று வரும் நிலையில், இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்
மணிப்பூர் வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த அதிகாரிகளின் நேர்மையான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு மணிப்பூரில் நடந்து வரும் இனக்கலவரம் குறித்து மிகவும் கண்டிக்கத்தக்க மௌனத்தைக் கடைப்பிடித்து வருகின்றது.
இந்நிலையில், மணிப்பூரில் 2 இளம் பெண்களுக்கு கொடூரம் இழைக்கப்பட்ட வழக்கில் முக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹேராதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய சிறப்புப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களை நிர்வாணமாக ஒரு கும்பல் அழைத்துச்சென்ற நிலையில் இதுவரை ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்.