ஜிம்பாப்வே நாட்டுக்கு 2016ஆம் ஆண்டுக்கு பிறகு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. அதன்படி, நேற்று இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி ஹராரே நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கே.எல். ராகுல், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து, முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தடுமாறியது. இதனால், 40.3 ஓவர்களில் 189 ரன்கள் மட்டுமே எடுத்து ஜிம்பாப்வே ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து, களம் இறங்கிய இந்திய அணி 30.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 192 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதே மைதானத்தில் இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.