இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவுடன் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியுடன் மோதும் மூன்றாவது டி20 போட்டி நேற்று இரவு ஐதராபாத்தில் நடந்தது. முன்னதாக, மொகாலியில் நடந்த முதலாவது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியும், நாக்பூரில் நடந்த இரண்டாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியும் என இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருந்தது. எனவே, நேற்றைய மூன்றாவது மற்றும் இறுதி போட்டியில் வெற்றிப்பெறும் அணியே தொடரை வெல்ல முடியும் என்பதால் இரு அணிகளும் முனைப்புடனே விளையாடின. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 19.5 ரன்களில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. இதனால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது. இந்தத்தொடரின் நாயகனாக இந்தியாவின் அக்ஸர் பட்டேலும், இந்த போட்டியின் நாயகனாக 36 பந்துகளில் 69 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ்வும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தொடரில் வென்றதன் மூலம் ஒரே ஆண்டில் டி-20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற அணி என்ற புதிய சாதனையை இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.