முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து, இந்த உயர்வினை இன்று முதல் செயல்படுத்திட இந்த அரசு முடிவு எடுத்து உள்ளது. இதன்படி, தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி இன்று முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படும். இதனால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள். இந்த உயர்வால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2359 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி இந்த நிதிச்சுமையை அரசு ஏற்றுள்ளது.
மேலும் சம வேலை சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடி வரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக, நிதித்துறை செயலாளர்- செலவினம் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலித்து இந்த கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பினை ஏற்று, 2023-ம் ஆண்டின் தொடக்கத்தினை உவகையுடன் கொண்டாடி மக்கள் வாழ்வை வளம் பெற செய்வதற்கான பெரும் பணியில் அரசுடன் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.