சென்னை: தமிழக அரசின் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் (வரவு-செலவு கணக்கு) சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டினை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
மத்திய அரசு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வசூலை தொடங்கிய பிறகு, மாநில அரசுகள் புதிய வரியை விதிக்க முடியாது. என்றாலும், செஸ் போன்ற ஓரிரு இனங்கள் மூலம் மாநில அரசுகள் வரி விதிக்க வழிவகை இருக்கிறது. ஆனாலும், தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. காலை 10.01 மணிக்கு தனது உரையை தொடங்கிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதியம் 12.03 மணிக்கு தனது உரையை நிறைவு செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:- காலை உணவு திட்டம் விரிவாக்கம் சமூக நீதியை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசின் மகத்தான கனவு திட்டமான முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி மதுரையில் தொடங்கப்பட்டது. வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்துக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
கோவை, மதுரையில் மெட்ரோ ரெயில் கோவையின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இந்நகரில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயப்படுத்தப்படும். மதுரை மாநகரில் மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரை நகரின் மையப் பகுதிகளில் நிலத்துக்கு அடியில் அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் திட்டம் திருமங்கலத்தையும், ஒத்தக்கடையையும் இணைக்கும். இந்த 2 நகரங்களில் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, பன்னாட்டு நிதி நிறுவனத்தின் நிதியுதவி மூலம் மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
அரசு பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களின் நலனைப் பாதுகாப்பதில் இந்த அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது. பழைய அரசு அலுவலர் குடியிருப்புகள் படிப்படியாக புதிதாக கட்டப்படும். வரும் நிதியாண்டில் ரூ.100 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும். உயர்ந்து வரும் கட்டுமான செலவுகளைக் கருத்தில் கொண்டு, அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீடுகட்டும் முன்பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக வரும் நிதியாண்டில் இருந்து உயர்த்தப்படும்.
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் ரூ.1,000 உரிமைத்தொகையாக வழங்கப்பட இருக்கிறது. மத்திய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்ப செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 என்பது, அவர்களது அன்றாட வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கும். வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டம் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், அண்ணா பிறந்த நாளான 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.