டெல்லி: மரபணு குறைபாட்டால் நிகழும் அரிய வகை மூளை நோயான ‘ஜிஎன்பி1 என்செபலோபதி’க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஜி-புரதங்களில் ஒன்றான ‘ஜிபி1 புரதத்தை’ உருவாக்கும் ஜிஎன்பி1 மரபணுவில் உள்ள ஒற்றை நியூக்ளியோடைடு பிறழ்வால் இந்த அரிய வகை மூளை நோய் ஏற்படுகிறது.
ஜிஎன்பி1 பிறழ்வுடன் பிறந்த குழந்தைகள் மன மற்றும் உடல் வளர்ச்சி தாமதம்,கால்-கை வலிப்பு (அசாதாரண மூளை செயல்பாடு), உடலியக்கபிரச்சினைகள் போன்ற துயரங்களை எதிர்கொள்கிறார்கள். இன்றுவரை, உலகம் முழுவதும் நூற்றுக்கும் குறைவாகவே இதன் பாதிப்புகள் உணரப்பட்டுள்ளன. இருப்பினும், தரவுகள் பெறப்படுவதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாததால் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் மிக அதிகமாக இருக் கலாம்.
சென்னை ஐஐடி-யின் முன்னாள் பிஎச்டி ஆய்வாளர் ஹரித்தா ரெட்டி கூறியுள்ளதாவது: இந்த நோய்க்கு திறம்பட சிகிச்சையளிக்க சிறந்தமருந்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், அமெரிக்க, இஸ்ரேல் ஆராய்சியாளர்களும் இந்த வகை மூளை குறைபாட்டுக்கான மருந்துகளை கண்டறிந்து மேம்படுத்துவதில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர்.