திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த எம்.ஜி.ஆர் நகரில் வசிப்பவர் தாஸ். இவரது எட்டு வயது மகன் மௌனிஷ் குமார் தாயை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் மௌனிஷ் எப்போதும்போல், இன்று காலை பள்ளிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது சிறுநீர் கழிப்பதற்காக தனது வீட்டருகே வெட்ட வெளிக்கு சென்றுள்ளார். அங்கு, இருக்கும் பன்றி பண்ணை ஒன்றில் பன்றிகளை மேய்ப்பதற்காக 20க்கும் மேற்பட்ட வேட்டை நாய்கள் வளர்க்கப்படுகிறன. இந்த நாய்கள் மௌலிஷ் குமாரை கண்டவுடன் திடீரென சூழ்ந்து கடித்து குதற ஆரம்பித்துள்ளது. இதனால், ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் நாய்களிடம் இருந்து மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சோழவரம் காவல் நிலையத்தில் சிறுவனின் தந்தை புகார் அளித்துள்ளார்.