நாகர்கோவில் மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்களின் மகள் காணாமல் போனது குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், “தங்களின் மகள் பப்ஜி மற்றும் ஃபிரீ ஃபயர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டி வந்ததால் ஏற்பட்ட பழக்கம் காரணமாக கடத்தப்பட்டு இருக்கலாம் எனவும் எனவே மகளை காவல்துறை மீட்டுக்கொடுக்க உத்தரவிட வேண்டும்” எனவும் குறிப்பிட்டிருந்தனர். இந்த மனு இன்று நீதிபதி மகாதேவன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, இந்திய அரசால் ஆன்லைன் விளையாட்டுகளான ஃப்ரீ ஃபயர் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு மீண்டும் விளையாட முடிகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதன்மீதான குற்றப்பிரிவு காவல் துறையின் நடவடிக்கை என்ன? ஏன் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேட்டுள்ளனர். மேலும், இதுபோன்ற விளையாட்டுகளால் இளைய சமுதாயம் வீணாகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தடை செய்யப்பட்ட இது போன்ற விளையாட்டுகள் ஆன்லைனில் கிடைக்காமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார்.