மதுரை: பிரதமர் மோடி, பொது தேர்வு குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் பிளஸ்-2 மாணவி அஸ்வினிதான் முதல் கேள்வியை கேட்டார். அவர் மோடியிடம், “எங்களுடைய பெற்றோர் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று எங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பு எங்களுக்கு சில நேரங்களில் மன உளைச்சலை தந்து விடுகிறது. நாங்கள் நன்றாக படித்தாலும், சில தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாமல் போய் விடுகிறது. நல்ல மதிப்பெண் எடுக்கும் எங்கள் மீது பலரும், அதிக மதிப்பெண் எடுப்பேன் என்று நம்பிக்கை வைத்து விடுகிறார்கள். அதனை நிறைவேற்ற முடியாமல் போகும் போது எங்களுக்கே மன பாதிப்பு ஏற்படுகிறது. அதனை எதிர்கொள்வது எப்படி?” என்றார்.
இந்த கேள்விக்கு பிரதமர் மோடி அளித்த பதில் :- “கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானத்தில் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்கள், பவுண்டரி, சிக்சர் என்று தங்களது விருப்பத்தை கூறிக் கொண்டே இருப்பார்கள். பலரும் அவர்களது ஆசையை பேட்ஸ்மேனிடம் கூறினாலும், பேட்ஸ்மேன் தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்ற பந்தின் மீது மட்டுமே குறியாக இருக்க வேண்டுமே தவிர, மற்றவர்களுடைய எதிர்பார்ப்பை பற்றி கவலைப்படக்கூடாது. இருப்பினும் மற்றவர்கள் எதிர்பார்ப்பு தனக்கு ஒரு உந்துதல் ஆகவும், தூண்டுதலாகவும் இருக்க வேண்டும். அதே நேரம் தனது கவனம் முழுவதும் தன்னுடைய படிப்பில் மட்டுமே இருக்கவேண்டும்” என்று, பதில் அளித்துள்ளார்.