கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று குறிப்பிட்டிருந்தது. அதன்படி, நேற்று முதல் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. இதையடுத்து, அதி கன மழை எச்சரிக்கையான ‘ரெட் அலர்ட்’ கொடுக்கப்பட்டதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அரவிந்த் அறிவித்திருந்தார். அதேபோல, கோவை மாவட்டத்தில் வால்பாறை தாலுக்காவுக்கு மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு வானிலை ஆய்வு மையம் சிகப்பு நிற எச்சரிக்கை விடுத்ததன் எதிரொலியாக அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.