நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமையான இன்று ஒருநாள் மட்டும் (ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், இன்று நடக்க இருந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, திங்கட்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணி வரை முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு, என்.சி.சி. மற்றும் அந்தமான் நிக்கோபாா் தமிழ் மாணவா்கள் ஆகியோருக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவா் சோ்க்கை நடைபெறும். தொடர்மழை காரணமாக நாமக்கல் கொல்லிமலை வட்டம், கோவை வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சேலம் மேட்டூர் மற்றும் மதுரை வைகை உள்ளிட்ட பல அணைகள் நிரம்பி உபரி நீர் அதிகம் திறக்கப்படுவதால் காவிரி கரையோர மாவட்டங்கள், வைகை கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.