இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அந்த விவரங்களின் படி, நேற்று முன்தினம் 9 ஆயிரத்து 923 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று 12 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று 13 ஆயிரத்து 313 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை, 4 கோடியே 33 லட்சத்து 44 ஆயிரத்து 958 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் 83 ஆயிரத்து 990 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இது நேற்றைய எண்ணிக்கையைவிட 2 ஆயிரத்து 303 அதிகமாகும். கடந்த சில தினங்களாகவே கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் எண்ணிக்கையைவிட, புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாகுபவர்கள் மற்றும் சிகிச்சைப்பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரம் வரை 10 ஆயிரத்து 972 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனைத்தொடர்ந்து, இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 36 ஆயிரத்து 027 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று மட்டும் 38 பேர் இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 941 ஆக அதிகரித்துள்ளது. மேலும், உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 கோடியே 64 லட்சத்து 59 ஆயிரத்து 083 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52 கோடியே 20 லட்சத்து 83ஆயிரத்து 221 பேர் குணமடைந்துள்ளனர். இத்துடன், கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 45 ஆயிரத்து 176 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல, தமிழகத்தில் நேற்று 771 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 345 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 126ஆக உள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 29 மாவட்டங்களில் கொரோனாவால் பாதித்தவர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.