முஃப்தி என்ற கன்னட திரைப்படத்தின் தமிழாக்கமாக உருவாகி வருகிறது நடிகர் சிம்புவின் ’பத்து தல’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கி வருகிறார். கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவரும் இந்த திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்ததும் சிம்பு, தந்தை டி.ராஜேந்தரின் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். இந்த நிலையில், தற்போது சிம்பு சென்னை திரும்பியதையடுத்து பத்து தல திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை மைசூரில் படக்குழு தொடங்கியுள்ளது. அதேசமயம் விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா என இரண்டு திரைப்படங்களுக்கு பிறகு 3ஆவது முறையாக இயக்குநர் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணைந்திருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி, முக்கிய வேடத்தில் ராதிகா நடித்துள்ளனர். இந்த திரைப்படத்துக்கு சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்ய, எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுதியுள்ளார். இதையடுத்து, முன்னதாக வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டீஸர்கள் வெளியாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நடிகர் சிம்பு, வெந்து தணிந்தது காடு திரைப்படத்துக்கான தன்னுடைய ‘டப்பிங்’ பணிகள் முடிவடைந்துவிட்டன என அப்டேட் கொடுத்துள்ளார். இதையடுத்து, வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.