வட மாநிலங்களில் கனமழை தொடரும் சூழலில் செவ்வாய்க்கிழமை மட்டும் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் வடமாநிலங்களில் மழை, வெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் மட்டும் பலி எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 31 ஆகப் பதிவாகியிருந்தது. இதுவரை அங்கு பருவமழைக் காலம் தொடங்கியதிலிருந்து 80 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தராகண்டில் 5, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தானில் தலா ஒன்று என உயிர்ப்பலிகள் பதிவாகியுள்ளன.
மோசமாக பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசம்: கடந்த 3 நாட்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என இமாச்சலப் பிரதேசம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களில் 31 பேர் நிலச்சரிவின் காரணமாக இறந்துள்ளனர். 1300 சாலைகள் சேதமடைந்துள்ளன. 40 பாலங்கள் சிதைந்துள்ளன. 79 வீடுகள் முற்றிலுமாக தரைமட்டமாகின. 333 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. சிம்லா – மனாலி, சண்டிகர் – மனாலி, சிம்லா – குல்கா தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டதால் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் திண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரை இமச்சலப் பிரதேசத்தில் மட்டும் 80 பேர் உயிரிழந்துள்ளனர். அனைத்துப் பள்ளிகளுக்கும் ஜூலை 15 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில தேர்வாணையம் நடத்தும் தேர்வு ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.