வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது அடுத்த 24 மணி நேரத்தில் காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதனால், ஒடிசா – மேற்கு வங்க கடலோரப் பகுதியை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்பொழுது ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வடமேற்கு அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக் கடல் -தெற்கு ஓடிசா அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு பகுதியில் நகர்ந்து சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா பகுதி அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒடிசா பகுதியில் அடுத்த மூன்று நாட்களுக்கு அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், மேலும் சத்தீஸ்கர் கோவா மற்றும் கொங்கன் பகுதிகள், மேற்கு மத்திய பிரதேஷ், கிழக்கு மத்திய பிரதேஷ் மற்றும் குஜராத் பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து கனமழை முதல் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வடதமிழக மாவட்டங்கள், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சி (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), தேவாலா (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) தலா 19, மேல் கூடலூர் (நீலகிரி) 18 செ.மீ., மழையும் அதிகபட்சமாக பெய்துள்ளது. இந்த நிலையில், இன்று மற்றும் நாளை ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்களை எச்சரித்துள்ளது.