புதுடெல்லி: பருவ நிலையில் ஏற்பட்ட மாற்றம், இந்தியாவின் கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட தட்ப வெப்ப நிலை மாற்றம் காரணமாக வடமாநிலங்களிலும், மத்திய மாநிலங்களிலும் கடந்த மாதம் முதல் கடுமையான குளிர் நிலவுகிறது. அதிலும் டிசம்பர் 15-ந் தேதிக்கு பிறகு குளிரின் தாக்குதல் அதிகரித்து கொண்டே வந்தது. கடந்த 2 தினங்களாக தலைநகர் டெல்லியில் தாங்க முடியாத அளவுக்கு பனி மூட்டமும், குளிரும் காணப்பட்டது.
1901-ம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு டெல்லியில் குளிர் நிலவியது. 122 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தாங்க முடியாத குளிர் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் நைனிடால், தர்மசாலா, டேராடூன் போன்ற நகரங்களில்தான் பனிப்பொழிவும், குளிர் காற்றும் தாங்க முடியாதபடி இருக்கும். இன்று (வியாழக்கிழமை) வடமாநிலங்களில் மிக மிக கடுமையான குளிர் காற்று வீசியது. அருணாச்சலப் பிரதேசத்தில் 11 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் மக்கள் பனியோடு உறைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் உள்ளனர். டெல்லியில் இன்று காலை 3 டிகிரி செல்சியசாக தட்ப வெப்பநிலை இருந்தது.
அதிகாலையில் வெளியில் வந்தவர்கள் 50 மீட்டர் தொலைவுக்குள் உள்ளவர்களைகூட பார்க்க முடியாத பனிபுகை மூட்டத்துக்குள் சிக்கி தவித்தனர். பஞ்சாப், அரியானா, சண்டிகர், உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களிலும் கடுமையான குளிர் நிலவுகிறது. இந்த மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு குளிர் காற்று வீசும் என்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.