குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் இதுவரை 150க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மாநில அரசுடன் பேரிடர் மேலாண்மை, கடற்படை, விமானப்படை, என்.டி.ஆர்.எஃப், தீயணைப்புப் படை மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ள நிலையில் காயமடைந்த 100க்கும் மேற்பட்டவர்களை மீட்பு படையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துமனையில் அனுமதித்துள்ளனர். அதிகப்படியான மக்கள் ஒரே நேரத்தில் பாலத்தின் மீது சென்றதால் விபத்து நேர்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துத் தொடர்பாக குற்றவியல் வழக்குப்பதிந்து உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருவதாக மாநில உள்துறை அமைச்சர் தகவல் அளித்துள்ளார். முன்னதாக, 100 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தை புதுப்பிக்கும் பணி அண்மையில் முடிந்து 5 நாட்களுக்கு முன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.