குஜராத் சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக 89 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதல்கட்டமாக தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சவுராஷ்டிரா பகுதிகளை உள்ளடக்கிய, 19 மாவட்டங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. மக்கள் திரளாக வந்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில், பழங்குடியினருக்கு 14, தலித்களுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 70 பேர்பெண்கள், 339 பேர் சுயேச்சை வேட்பாளர்கள். இதில் நடசத்திர வேட்பாளர்களும் நிறைய பேர் இருக்கின்றனர். குறிப்பாக ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இன்று களம் காண்கிறார். ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி கம்பாலி தொகுதியில் களம் காண்கிறார்.இன்றைய தேர்தலுக்காக மொத்தம் 25,430 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
டிச.8ல் தேர்தல் முடிவு: இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இப்போதைய பாஜக எம்எல்ஏ-க்கள் 42 பேருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால்அதிருப்தி அடைந்த 19 பேர் சுயேச்சையாக களமிறங்கி உள்ளனர். இதில் 9 பேர் முதல்கட்டத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.