சென்னை: தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- என் பேரன்புக்குரிய 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கின்ற மாணவ, மாணவிகளே, அனைவருக்கும் என் அன்பு வணக்கம். என்ன, பரீட்சை கவலையில் இருக்கிறீர்களா? ஒரு கவலையும் வேண்டாம், எந்த பயமும் வேண்டாம். இது இன்னொரு பரீட்சை, அவ்வளவுதான். எந்த கேள்வியாக இருந்தாலும் நீங்கள் படிக்கிற புத்தகத்தில் இருந்துதான் வரப்போகிறது. அதனால் உறுதியோடு தேர்வை எழுதுங்கள்.
உங்களுக்கு தேவையானது எல்லாம் தன்னம்பிக்கையும், மன உறுதியும்தான். தேர்வு என்பது உங்களை பரிசோதிப்பது இல்லை, உங்களை அடுத்தகட்டத்துக்கு எடுத்துக்கொண்டு போவது, உயர்த்தி விடுவது. அதனால் மீண்டும் சொல்கிறேன், எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்.உங்களின் வெற்றிக்காக உங்கள் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் போல நானும் காத்துக்கொண்டிருக்கிறேன். முதல்-அமைச்சராக மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.