தமிழக அரசின் சார்பில் அறநிலை துறை கீழ் செயல்படும் திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை மேலும் ஐந்து திருக்கோவில்களுக்கு விரிவாக்கம் செய்யும் நிகழ்ச்சி, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நடை பெற்றது.இதில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு திட்டத்தினை தொடக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், 2021-22ஆம் ஆண்டு இந்து சமய அறநிலை துறை மானியகோரிக்கையில் அறிவிப்பு எண் 25 யின் படி 10 திருக்கோவில்களுக்கு இந்த திட்டத்தை அறிவித்திருந்தோம். ஏற்கனவே திருச்செந்தூர், வடபழனி, திருவேற்காடு உள்ளிட 10 கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் முழுமூச்சாக வேலைகளை செய்யாத காரணத்தினால் கடந்த ஆண்டு பெய்த பருவமழைக்கு சென்னையே ஸ்தம்பித்தது இதை யாரும் மறுக்க முடியாது. இந்த நிலை மாற வேண்டும் என்ற நோக்கத்தில் தனது கால்கள் தரையில் படாத நாளே இல்லை என்றவாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைத்தார். மேலும், தமிழக ஆளுநர் ஒரு நாடு ஏதாவது மதத்தைச் சார்ந்து தான் இருக்கும் என்று பேசியது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ஜாதி, மதம், மொழி ரீதியாக மக்களை பிரிக்க முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார். தமிழக அரசு மதம் ஜாதி சார்ந்த அரசு அல்ல. ஆளுநர் வேலை இல்லாமல் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார் எங்களுக்கு மக்கள் பணி இருக்கிறது என்றார். தமிழக ஆளுநர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றது பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, மதவாத சக்திகள் தலை தூக்கினால் அவற்றை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் தயங்க மாட்டார். ஆகவே, தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி மதம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மக்களை இழுத்துச் சென்றாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள், அரசியலுக்காக செய்யப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” என்று கூறினார்.