டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்கள் மழை மற்றும் குளிர்காலங்களில் தேங்கி நிற்கும் நன்னீரில் அதிகமாக பெருக்கமடைகின்றன. இந்த நிலையில், 2022ஆம் ஆண்டு மே மாதம் இறுதி வரை தமிழ்நாட்டில் 2,548 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் அதேவேளையில், மற்றொருபுறம் தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சலும் பரவும் நிலை உருவாகிவருகிறது. எனவே, டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட சுகாதார துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை விரிவாக மேற்கொள்ள வேண்டும், டெங்கு காய்ச்சல் குறித்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், மாவட்ட சுகாதார இயக்குநரகத்துக்கு தகவல் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும், நோய்களை பரப்பும் கொசுக்கள் மற்றும் லார்வா உற்பத்தி குறித்து கண்காணிக்க வேண்டும், விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், மழைநீர் தேங்காத வகையில் கழிவுகளை அகற்ற அறிவுறுத்த வேண்டும், குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகித்தல், நிலவேம்பு குடிநீர் விநியோகித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.