காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒரு ஆண்டு திமுக ஆட்சியில் எதிர்பார்ப்பு இருந்த பொதுமக்களுக்கு தற்போது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது வருத்தத்துக்குரியது. கொடுத்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமலே திமுக அரசு செயல்பட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கை என்பது வருங்கால இந்திய மாணவர்களின் எதிர்கால நலனுக்காக கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டில் கல்விக் கொள்கையை அரசியலாக்குவது ஒருபோதும் ஏற்புடையதல்ல, புதிய கல்விக் கொள்கையில் ஏற்படும் சந்தேகங்களை விளக்க மத்திய அரசு இருக்கும்போது இதனை முறையாக எடுத்துக் கொண்டு சென்று சந்தேகங்களை தீர்க்க வேண்டியது அரசின் கடமை, கல்விக் கொள்கையைப் பற்றி தமிழக அரசு ஆலோசனை கூறலாம். ஆனால், எதையும் செய்யாமல் கண்மூடித்தனமாக எதிர்ப்பது ஏற்புடையதல்ல. நீட் தேர்வு பிரச்சினை இறுதிமுடிவு உச்ச நீதிமன்றத்தின் அடிப்படையில் இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வில் பிற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுவது தெரிய வருகிறது. குறிப்பாக கிராமத்து மாணவர்கள் செயல்படுவது தான் உண்மையான நிலை. திமுக அரசு பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க மாட்டோம் என சொல்வது மட்டுமல்லாமல் ஆண்டுக்கு ஒருமுறை சொத்துவரி உயர்த்துவோம் என கூறுவது மக்கள் விரோதபோக்கு மேலும் மக்கள் மீது ஆட்சியாளர்கள் அக்கறை இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால் மத்திய அரசு துணை இருந்து மக்கள் சுமையை குறைக்க பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். அதையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று அவர் பேசினார்.